Wednesday, May 30, 2007

தமிழ் நாட்டுத் தமிழர்கள் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும்!

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தனிநாட்டிற்காக போராட வேண்டும் என்று சிறிலங்காவின் பலம் பொருந்திய கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹலஉறுமய தெரிவித்துள்ளது।

சிறிலங்கா சிங்களவர்களுக்கு சொந்தம் என்றும், தமிழ்நாடே தமிழர்களுக்கு சொந்தமான நாடு என்றும் அக் கட்சி கூறியுள்ளது। சிறிலங்காவில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமே தவிர அவர்களுக்கு சொந்தமான தாயகம் இங்கு இல்லை என்றும் அக் கட்சி தெரிவித்தது.

ஜப்பானியர்களுக்கு ஜப்பான் போன்று, ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து போன்று தமிழர்களுக்கு தமிழ்நாடு இருக்கின்றது என்றும், ஆகவே தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே தனிநாட்டுக்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஜாதிக ஹலஉறுமய மேலும் கூறியுள்ளது।

"சிறிலங்காவில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல, அவர்கள் ஒரு சிறுபான்மை இனமே" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தையே இந்திய அரசும் கொண்டிருக்கிறது। அதே போன்று தமிழ்நாட்டு தமிழர்கள் தனிநாட்டுக்காக போராட வேண்டும் என்ற ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தனியாக பிரிந்து செல்வதும், இந்தியக் கூட்டாட்சியில் தொடர்ந்து இருப்பதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முடிவு। சிங்கள அரசு போன்று இந்திய அரசும் தமிழ்நாட்டுத் தமிழர்களை அடக்க முனையுமானால், அவர்களும் பிரிந்து செல்கின்ற முடிவை எடுக்கக் கூடும்.

ஆயினும் சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தமிழர்களுக்கு என்று உலகில் இருக்கும் இரண்டு நாடுகளில் ஒன்றை ஏற்றுக் கொண்டிருப்பது நல்ல விடயம். அதே போன்று தமிழீத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை விரைவில் வரும்.

Friday, May 25, 2007

நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்!

கடலிலும் தரையிலும் சண்டை செய்கின்ற வலிமை வாய்ந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவு கடற்படைத் தளத்தை நேற்று (24.05.07) தாக்கி அழித்த சம்பவம் சிறிலங்கா அரச தரப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிகாலை 1 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவின் தென்பகுதியில் தரையிறங்கி, கடற்படைத் தளம் மீது தாக்குதலை தொடுத்தது. இரண்டு மணி நேர கடும் சமரின் பின்னர் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

அதே வேளை சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகளும், நீருந்து விசைப்படகுகளும் நெடுந்தீவுக்கு விரைந்து வந்தன. அந்தப் படகுகள் மீதும் கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு டோராப் படகு அழிக்கப்பட்டது. இரண்டு நீருந்து விசைப் படகுகள் சேதமாக்கப்பட்டன.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த விடுதலைப் புலிகள் கடற்படைத் தளத்தில் சிறிலங்கா கடற்படையினர் விட்டுவிட்டு ஓடிய ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு அதிகாலை 7 மணியளவில் தளம் திரும்பினர்.

இந்தத் தாக்குதலில் 34 கடற்படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச் சாவடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து பிற்பகல் வரை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு மௌனம் சாதித்தது. பின்பு வழமை போன்று தமது தரப்பு இழப்புக்களை குறைத்து அறிவித்தது. தமது தரப்பில் 4 கடற்படையினர் கொல்லப்பட்டும், 4 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணியான ஈரூடகப் படையணி நடத்திய இந்தத் தாக்குதல் சிறிலங்கா தரப்பில் பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியின் முதலாவது தாக்குதல் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மண்டைதீவு படைத் தளத்தின் மீது இடம்பெற்றது. அந்தத் தாக்குதல் பற்றிய செய்தியில் விடுதலைப் புலிகள் தாம் கடலிலும் தரையிலும் சண்டை செய்ய வல்ல ஈருடகப் படையணி ஒன்றை உருவாக்கி இருப்பதை பிரகடனப்படுத்தி இருந்தனர்.

அமெரிக்காவின் ஈரூடகப் படையாகிய "மரைன்" உலகப் புகழ் வாய்ந்தது. அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான போரில் இருந்து இன்றைய ஈராக் போர் வரைக்கும் அமெரிக்காவினுடைய அனைத்துப் போர்களிலும் "மரைன்" படையணி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இன்றைக்கு உலகம் முழுவதையும் அமெரிக்கா தன்னுடைய வல்லாதிக்க அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பதற்கு அதனுடைய "மரைன்" படையணி மிக முக்கிய காரணம்.

தமிழீழத்தின் களநிலவரங்களையும், புவியியல் அமைப்பையும் கொண்டு பாக்கின்ற போது "மரைன்" போன்ற ஒரு ஈரூடகப் படையணியை விடுதலைப் புலிகள் உருவாக்கியது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்தது.

ஆயினும் மண்டை தீவு தாக்குதலுக்குப் பின்பு விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதல் எதையும் மேற்கொள்ளவில்லை. ஏறக்குறைய பத்து மாதங்கள் கழித்து நெடுந்தீவு மீது விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி ஒரு வெற்றிகரமான அதிரடித் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

பல மாதங்களுக்கு பிறகு யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு படைத் தளம் மீதான தாக்குதலாக இது அமைகிறது.

யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் விரைவில் அடையக்கூடிய இலக்குகள் இருக்கின்றன. ஆனால் ஏறக்குறை 16 கடல்மைல்கள் தொலைவில் உள்ளதும், சிறிலங்கா படையினருக்கு சாதகமான இடத்தில் அமைந்துள்ளதுமான நெடுந்தீவுப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதலை நடத்தி தனது வலிமையை நிரூபித்து இருக்கிறது.

கொழும்பில் இருந்து யாழ்குடாவிற்கான வினியோகப் பாதையின் வழியில் நெடுந்தீவு அமைந்துள்ளது. நெடுந்தீவு விடுதலைப் புலிகளின் கைகளில் வீழுமானால் யாழ் குடாவிற்கான கடல் வினியோகம் முற்றாக துண்டிக்கப்படும்.

தற்போதைய நிலையில் யாழ் குடாவை கைப்பற்றாது நெடுந்தீவை மட்டும் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய பலம் விடுதலைப்புலிகளுக்கு உண்டா என்பது ஒரு கேள்விக் குறியே. ஆயினும் நெடுந்தீவுத் தளம் மீதான இந்தத் தாக்குதல் யாழ் குடாவிற்கான வினியோகத்திற்கு விடப்பட்ட ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அத்துடன் நெடுந்தீவுக் கடற்படைத் தளம் ஒரு ராடர் நிலையமாகவும் செயற்பட்டுவந்தது. வான்புலிகளின் வருகையின் பின்பு நெடுந்தீவின் ராடர் நிலையம் மேலும் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது. இந்த ராடர் நிலையத்தை நவீனப்படுத்துகின்ற திட்டமும் சிறிலங்கா அரசிடம் இருந்தது. தற்பொழுது அந்த ராடர் நிலையம் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டதோடு, ராடரையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றிருக்கிறார்கள்.

இப்படி பல வகைகளில் நெடுந்தீவுத் தளம் மீதான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி இலங்கைத் தீவின் எப் பகுதியிலும் தரையிறங்கித் தாக்குதலை நடத்தி விட்டு தளம் திரும்பக் கூடிய வலிமையுடன் இருக்கிறது. துறைமுகங்களை மட்டும் அன்றி இலங்கைத் தீவின் கரையோரமாக உள்ள அனைத்து இராணுவ, பொருளாதார இலக்குகளையும் விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நெருக்கடி நிலை சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

விரைவில் விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் வன்னியில் பெரும் எடுப்பில் நடந்து வருகின்றன. "கறுப்பு ஜுலை" சில வாரங்களில் வருவதும் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அவ்வாறான ஒரு பாரிய படை நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் ஈருடகப் படையணி மிக முக்கிய பங்கை ஆற்றும் என்று நம்பலாம்.