Tuesday, July 22, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (4)

தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் “பூவராகன்” பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம்.

வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்காக உயிரை தியாகம் செய்கின்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் அடிக்கடி காண்பிக்கப்படுகின்ற ஒன்று. இதற்கான சிந்தனை எங்கேயிருந்து வருகின்றது என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்தச் சிந்தனை மனு தர்மத்தில் இருந்து வருகின்றது.

மனு தர்மம் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் கடமைகளை வகுத்துக் கொடுக்கின்றது. பாவங்களிற்கான தண்டனைகளை கூறுகிறது. சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழி வகைகளை கூறுகின்றது.

மிக மிக தாழ்த்தப்பட்ட மக்களை மனு தர்மம் “பாகியசாதியினர்” என்று குறிப்பிடுகின்றது. இந்தப் “பாகியசாதியினர்” சுவர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு வழியை மட்டுமே மனு தர்மம் கூறுகிறது. அந்த வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பாகியசாதியினர் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது.

அந்த வழி எதுவென்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். மனுதர்மத்தின் பாகியசாதியினனாகிய பூவராகன் பின்பற்றிய அதே வழிதான்.

மனு தர்மத்தின் பத்தாவது அத்தியாயம் 62வது சுலோகம் இப்படிச் சொல்கிறது: பார்ப்பனர், பசு, பெண், பாலன் இவர்களை காப்பாற்றுவதற்காக பாகியசாதியினர் பொருளை வாங்காமலே உயிரை விடுவது அவர்களுக்குச் சுவர்க்கத்திற்கு காரணமாகும்.

இந்தச் சுலோகம் கூறுவது போன்றே தலித்தாகிய பூவராகனும் பொருள் எதையும் வாங்காமலேயே தன்னை விட உயர்சாதியினரின் பாலர்களுக்காக உயிரை விடுகின்றான்.

மனு தர்மத்தில் இருந்து உருவான இந்தப் பார்ப்பனியச் சிந்தனையை தமிழ் சினிமா எத்தனையோ படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதி என்று பிரகடனப்படுத்தும் கமலும் அதே மனு தர்ம பார்ப்பனிய சிந்தனையை பூவராகன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இறந்து கிடக்கும் பூவராகனின் காலை ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தொட்டுக் கும்பிடுகின்றார் அல்லது தொட்டுக் கும்பிடும்படி கேட்கப்படுகின்றார். மனநலம் குன்றிய ஒரு பார்ப்பன மூதாட்டி பூவராகனை தன்னுடைய மடியில் கிடத்தி தன்னுடைய மகன் என்று சொல்கிறார்.

பார்ப்பனர்களுக்குத்தான் நேரடியான சுவர்க்கம் உண்டு என்பது இந்து மதத்தின் பொதுவான கருத்து. மற்றைய வர்ணத்தினர் புண்ணியங்கள் செய்து, அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்துதான் சுவர்க்கத்தை அடைய வேண்டும். அடுத்த பிறப்பை எடுக்காமலேயே பார்ப்பனர்களைப் போன்று நேரடியாக சுவர்க்கம் செல்வது மற்றைய வர்ணத்தினருக்கு மிகவும் கடினம்.

மனு தர்மம் சொன்னதன்படி தன்னுடைய உயிரை தியாகம் செய்ததன் மூலம், பார்ப்பனர்களால் அடையக் கூடிய சுவர்க்கத்தை அடையும் தகுதி பெற்றுவிட்ட ஒருவனின் காலை தொட்டு வணங்குவது என்பதும், அந்த ஒருவன் பார்ப்பன மூதாட்டியால் “மகன்” என்று அழைக்கப்படும் “உயர்நிலையை” அடைவதும் பார்ப்பனிய இந்தத்துவ சிந்தனையின் எச்சங்களே தவிர வேறில்லை.

தசாவதாரத்தில் இஸ்லாமிய மக்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் இங்கே குறிப்பிட வேண்டும். ஏதோ அந்நிய தேசத்தவர்கள் போன்றும், நிறைய பிள்ளை குட்டி பெறுபவர்கள் போன்றும் இஸ்லாமியப் பாத்திரங்கள் காட்டப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் உண்டு.

கமல் தாறுமாறாக லாரியை ஓட்டி இஸ்லாமியக் குடும்பம் வந்த வேன் ஒன்றின் மீது மோதி விடுகிறார். ரத்தக் காயம் பட்ட இஸ்லாமியப் பெண்மணியை இரத்தம் கொடுத்துக் காப்பாற்றுகிறார். தங்கள் மீது மோதி ரத்தக் காயம் ஏற்படுத்தியதே கமல்தான் என்று அறியாது, அந்த இஸ்லாமியக் குடும்பம் கமல் மீது நன்றி பாராட்டுகிறது. அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது.

அந்நிய தேசத்தவர்களான, நிறையப் பிள்ளை குட்டி பெறுபவர்களான இஸ்லாமியர்களை லாரியால் அடித்ததும் கமல்தான். அவர்களை காப்பாற்றியதும் அதே கமல்தான். காப்பாற்றிய கமலுக்கு இஸ்லாமியக் குடும்பம் நன்றியோடு இருக்கிறது. இந்த இடத்தில் குஜராத் மோடியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

ஆயிரக் கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து விட்டு, அந்த மக்களுக்கு தான்தான் பாதுகாப்பு என்று மோடி சொல்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற பேரினவாதச் சிந்தனை இது. “அடிப்பதும் நாங்களே, காப்பாற்றுவதும் நாங்களே” என்கின்ற இந்த பேரினவாதச் சிந்தனை இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.

இந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக தசாவதாரத்தின் இஸ்லாமியக் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சியை புரிந்து கொள்கின்ற போது, கமலின் பார்ப்பனிய முகம் மேலும் கோரமடைகிறது.

இந்தத் தொடரை முடிக்கின்ற நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இன்னம் ஒரு விடயம் உண்டு. கமல் தன்னுடைய படங்களில் அடக்குமுறையாளர்களான பார்ப்பனர்களை அப்பாவிகளாக சித்தரிக்கின்றார். அந்த அப்பாவிகளை காப்பதற்கு தான் இருப்பதாக காட்சி அமைக்கிறார். தசாவாதரம் படத்தின் இந்துத்துவ பார்ப்பனிய நலன்களுக்கு ஏதுவான வகையில் காட்சிகளை அமைக்கின்றார்.

இப்பொழுது இதன் அடிப்படிடையில் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் போது கமல் பேசிய பேச்சினை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சத்தியராஜ் போன்றவர்கள் தமிழ் தேசிய உணர்வை தட்டி எழுப்புவது போன்று பேச, அதை தணிப்பதற்கு கமல் தன்னுடைய “வள வளா” பேச்சின் மூலம் முனைந்தார்.

தமிழ் தேசிய உணர்வை தணிக்க வேண்டும் என்ற சிந்தனை பார்ப்பனிய நலன் சார்ந்தது அன்றி வேறென்ன?

கமலின் பார்ப்பனிய முகம் பற்றிய குற்றச்சாட்டை கமலினுடைய ஒரு வசனத்தையோ அல்லது ஒரு காட்சியையோ வைத்து நான் கூறவில்லை. தொடர்ந்து அவரைக் கவனித்த பின்பே இக் குற்றச்சாட்டை வைக்கின்றேன். இந்தத் தொடரின் நான்கு பாகங்களையும் படித்த உங்களுக்கு இது புரியும் என்று நம்புகின்றேன்.

பார்ப்பானாக நடிக்கின்ற சூத்திரனையும், சூத்திரனாக நடிக்கின்ற பார்ப்பானையும் நம்பாதே என்பது தந்தை பெரியாரின் கருத்து. இந்தக் கருத்து உண்மை என்று இதுவரை பல பார்ப்பனர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் எமக்கு நிரூபித்திருக்கிறார்கள். கமலின் அண்மைய நடவடிக்கைகளும் அவர் பற்றிய மறுவாசிப்பின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.

- வி.சபேசன்

http://www.webeelam.net

Saturday, July 12, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (3)

பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

“அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட “பக்த பிரகாலதா” போன்ற ஒரிரு திரைப்படங்களைத் தவிர மற்றைய பக்திப் படங்கள் அனைத்தும் “சிவமயமாகவே” இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்சினிமாவில் இந்துக்களின் முதன்மையான கடவுள் என்றால் அது சிவன்தான். இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. சிவன் பின்தள்ளப்பட்டு விஸ்ணு முன்னிறுத்தப்பட்டு வருகின்றார். அதுவும் பாபர் மசூதி விவகாரத்திற்கு பின்பு ராமர், விஸ்ணு, கிருஸ்ணர் போன்ற கடவுள்கள் முன்னிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

முன்பு தமிழ் சினிமாவில் நாமத்தோடு கூடிய முகங்களை வெகு குறைவாகத்தான் பார்க்கலாம். அப்படி வருகின்ற முகங்களும் அநேகமாக நகைச்சுவைப் பாத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு கிராமத்தில் இருந்த வருவதாகக் காட்டப்படும் பாத்திரங்கள்தான் அநேகமாக விபூதியை பூசிக் கொண்டு வருகின்றன. நகரத்து நாயகர்கள் நாமத்தோடு வருகின்றார்கள். பார்ப்பனப் பாத்திரங்களைக் காட்டுவது என்றால் கிராமமோ, நகரமோ அங்கே நாமம்தான் இருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மெது மெதுவாக நடந்து வருகின்ற இந்த மாற்றம் தற்பொழுது யாரும் உணராத வண்ணம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

மிகவும் திட்டமிட்டுச் செய்யப்படும் நுண்ணியமான அரசியல் இது. ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் விரும்பியது போன்று இந்துக்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பான்மையான மக்கள் ராமருக்காக கொதித்து எழவில்லை. இதற்கு தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும் வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

தம்மை இந்துவாக கருதி இந்துக் கடவுள்களை வணங்குகின்ற எததனையோ பேர் ராமனையோ, விஸ்ணுவையோ வணங்குவது இல்லை. ராமனை ஒரு கதையின் நாயகனாக மட்டும் கருதுகின்ற கோடிக் கணக்கான இந்துக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சிவன் போன்ற வேறு கடவுள்களை தமது முதற் கடவுளாக வணங்கி வருபவர்கள். இவர்களுக்கு மத நம்பிக்கை இருந்தும், ராம ஜென்ம பூமி விவகாரம் இவர்களிடம் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் விஸ்ணு சார்ந்த கடவுள்களை மக்களிடம் முன்னிறுத்துவதற்கு பல வழிகளில் இந்துத்துவ சக்திகள் முயன்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் விஸ்ணு, ராமர் போன்றவற்றை இந்து மதத்தின் பெரும் கடவுள்களாக முன்னிலைப் படுத்துவது என்பது. இந்த வேலையை “தசாவதாரம்” திரைப்படம் மிகச் சிறப்பாகச் செய்கிறது.

மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்துத்துவத்திற்கு சார்பான படமாக சிலரால் விமர்சிக்கப்படுவது உண்டு. மணிரத்தினமும் “துலுக்கச்சி” போன்று சொற்களின் மூலம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், “பம்பாய்” திரைப்படத்தை ஆழமாக ஆராயாது விட்டால், மணிரத்தினத்தின் இந்துத்துவ சிந்தனையை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகி விடும். அந்தளவிற்கு மணிரத்தினம் தன்னை நடுநிலையாளராகக் காண்பிக்கும் நோக்கோடு படத்தில் வரும் காட்சிகளை அமைத்திருப்பார்.

இஸ்லாமியர்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வந்தால், அடுத்ததாக இந்துக்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வரும். ஒரு இஸ்லாமியர் கொல்லப்படும் காட்சி வந்தால், அடுத்து ஒரு இந்து கொல்லப்படும் காட்சி வரும். இப்படி இரு தரப்பும் சமாமான முறையில் தாக்கப்படுகின்ற மற்றும் தாக்குகின்ற கட்சிகளை மணிரத்தினம் கவனம் எடுத்து உருவாக்கியருப்பார்.

இந்தக் குறைந்தபட்ச நடுநிலைமையைக் கூட கமல் தன்னுடைய தசாவதாரம் படத்தில் வெளிப்படுத்தவில்லை. முற்று முழுதாகவே வைணவ சார்பு நிலை எடுக்கின்றார்.

தசாவதாரம் திரைப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். 12ஆம் நூற்றாண்டில் படம் ஆரம்பிக்கின்றது. சைவ மன்னனாகிய இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளின் சிலையை பெயர்த்து எடுக்கின்றான். அதை தடுக்க முயல்கின்ற வைணவப் பார்ப்பனராகிய ரங்கராஜன் நம்பி (கமல்) சைவ மன்னனாலும் சைவர்களாலும் துன்புறுத்தப்பட்டு பெருமாளின் சிலையோடு சேர்த்து கடலில் வீசி சாகடிக்கப்படுகின்றார்.

அந்தக் காட்சி முழுவதும் சைவர்கள் வில்லன்களாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். “கல்லை மட்டும் கண்டால்” பாடலின் வரிகளும் சைவத்தை தாழ்த்தியும், வைணவத்தியும் உயர்த்தியும்தான் எழுதப்பட்டிருக்கின்றன. “பெருமாள் புராணம்” அத்துடன் முடிந்து விடவில்லை. படம் முழுவதும் பெருமாள் வருகின்றார். கடைசியில் சுனாமி உருவாவதற்கு காரணமாக இருந்து சில இலட்சம் மக்களை கொன்று கோடிக் கணக்கான மக்களைக் காப்பாற்றுகின்றார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். தசாவதாரம் பற்றி புளுகாங்கிதப்பட்டு விமர்சிக்கும் பகுத்தறிவு நண்பர்களும் உண்டு. கமல் மதத்திற்கு, கடவுளுக்கு எதிராக வசனங்களைப் பேசுகின்றார், பெருமாள் சிலையை சுடுகாடு வரைக்கும் தூக்கிக் கொண்டு ஓடுகின்றார், அதை தூக்கி எறிந்து விளையாடுகின்றார், “கடவுள் இருந்தால் நல்லா இருக்குமே” என்று வசனம் பேசுகின்றார் என்றெல்லாம் தமக்கு சார்பான விடயங்கள் பற்றி எழுதியும் பேசியும் தசாவதாரம் பகுத்தறிவைப் பறைசாற்றும் ஒரு திரைப்படம் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்களின் விமர்சனத்தில் அடிப்படையிலேயே ஒரு தவறு இருப்பதாக நான் கருதுகிறேன். படத்தின் நாயகனின் கோணத்தில் இருந்து விமர்சனத்தை செய்யக் கூடாது. பார்வையாளனின் கோணத்தில் இருந்துதான் ஒரு படத்தை விமர்சிக்க வேண்டும்.

பெருமாள் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்க்கின்ற அதே பார்வையாளன்தான், அந்தச் சிலை ஒவ்வொருமுறையும் நிமிர்ந்த நிலையில் கம்பீரமாக பரவசப்படுத்தும் பின்னணி இசையோடு தரையில் வந்தமர்வதையும் பார்க்கின்றான். அப்பாவிக் கோவிந்து (கமல்) “கடவுளுக்கு” பக்கத்தில் தான் நிற்பதை அறியாமல் “கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்” என்று வசனம் பேசுவதையும் பார்க்கின்றான்.

சுனாமி வந்தது பற்றி கமல் செய்யும் தர்க்கங்களை கேட்கும் கடவுள் நம்பிக்கையுள்ள பார்வையாளன் சுனாமி வந்ததற்கு காரணமான சில விடயங்களை படத்தில் கவனிக்கின்றான். கோடிக்கணக்கான மக்களை காப்பதற்கும், தான் மீண்டும் வெளியில் வருதற்கும் சுனாமியை பெருமாள் கொண்டு வருகின்றார். ஆயினும் சுனாமியில் இலட்சக் கணக்கில் மக்கள் இறக்கின்றனர். அதற்கும் பார்வையாளன் சில காரணங்களை படத்தில் காண்கின்றான். பெருமாளை கடலில் வீசியதால் ஏற்பட்ட பாவத்தாலும், பார்ப்பான் ஒருவனை துன்புறுத்தி பெருமாளோடு கட்டி கடலில் வீசியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசத்தாலும் இந்த அழிவு நேர்ந்தது என்பது அந்தப் பார்வையாளனுக்குப் புரிகிறது. புரியாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ரங்கராஜ நம்பியும் பூணுலை உயர்த்தி வசனம் வேறு பேசி வைக்கிறார்.

பெரும்பான்மையான பகுத்தறிவாளர்களை தன்னுடைய கோணத்திலும், பெரும்பான்மையான கடவுள் நம்பிக்கையாளர்களை பார்வையாளனின் கோணத்திலும் படத்தைப் பார்க்க வைப்பதில் கமல் கண்ட வெற்றிதான், இன்றைக்கு இந்தப் படம் இப்படித் தாறுமாறாக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவாளர்களை திருப்திப்படுத்தும் படத்தின் வசனங்களும் காட்சிகளும் இருக்கட்டும். கடவுளை நம்புபவர்களின் மனதில் கமல் பெருமாளை பதிய வைத்து விட்டார். அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாகவே வைணவத்திற்கு போட்டியான சைவத்துடன் மோதி, கிளைமாக்ஸில் வைணவம் வெற்றி பெறுகிறது.

பாபர் மசூதி பிரச்சனைக்குப் பிறகு அதிகரித்த அளவில் வைணவம் சார்ந்த கடவுள்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான பரப்புரைகளுக்கு சினிமாவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், அதற்கு கமலும் தன்னுடைய தசாவதாரம் திரைப்படம் மூலம் துணை போய்விட்டார்.

தொடரும்..

- வி.சபேசன்

Saturday, July 05, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (2)

கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான்.

தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

பார்ப்பனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற வரலாற்று உண்மையை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவான விழிப்புணர்ச்சி பெரும் திருப்பங்களை உருவாக்கியது. இந்த விழிப்புணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியது. இந்த வரலாற்று உண்மைக்கு எதிரான முறையில் பார்ப்பனர்கள் உருவாக்க முனையும் மாய விம்பத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் பார்ப்பனர்களை அப்பாவியாகக் காட்டுவது என்பது.

ஆதாவது ஒரு மக்கள் கூட்டத்தை கேவலப்படுத்தி அடக்கி வைத்திருந்த அடக்குமுறையாளர்களை “தனி மனித அப்பாவிகள்” என்று காட்டுகின்ற ஒரு அரசியல் இங்கே ஒளிந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை “சூழ்ச்சி மிக்கவர்களாகவும்”, “சமூக அக்கறை அற்றவர்களாகவும்” சித்தரித்த கமல் தற்பொழுது பார்ப்பனர்களை தொடர்ந்து அப்பாவிகளாகவே சித்தரித்து வருகின்றார். இதனுடைய உச்சக்கட்டமாக வசூல்ராஜா திரைப்படத்தில் வந்த காட்சி அமைந்தது.

கமல் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் ஒரு அப்பாவி இளைஞனை மூத்த மாணவர்கள் “ராக்கிங்” (பகிடிவதை) செய்ய முனைவார்கள். அந்த அப்பாவி இளைஞனின் சட்டையைக் கழற்றி விட்டு அவனை நடனம் ஆடச் சொல்வார்கள். சட்டை கழற்றப்பட்ட அந்தப் அப்பாவி இளைஞனின் மேனியை பூணூல் அலங்கரித்திருக்கும்.

உண்மையில் அந்தக் காட்சியில் பூணூல் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பூணூல் அணியாமல் கூட ஒரு அப்பாவி இளைஞனை சித்தரித்திருக்க முடியும். உண்மையான அப்பாவிகள் பூணூல் அணியாதவர்கள்தான். ஆனால் கமல் அங்கே பூணூலை திணிக்கிறார். கமல் வந்து தன்னையும் “ராக்கிங்” செய்யச் சொல்வார். மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். “உருத்திராட்சக் கொட்டை அணிந்தவனை மட்டும்தான் ராக்கிங் செய்வீர்களா” என்று ஒரு கேள்வியைக் கேட்பார். பின்பு தன்னுடைய புஜபலத்தைக் காட்டி ராக்கிங் செய்த மாணவர்களையே ராக்கிங் செய்து விட்டு, பூணூல் அணிந்த அப்பாவியிடம் கமல் சொல்வார் “கவலைப்படாதே! நான் இருக்கிறேன்”.

வசூல்ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சங்கரோ, மணிரத்தினமோ இல்லை என்பதாலோ, இந்தப் படத்தில் கமல்தான் கதாநாயகன் என்பதாலோ இந்தக் காட்சி சொல்கின்ற செய்தியின் அர்த்தம் மாறிவிடப் போவதில்லை.

கமல் தயாரித்த நளதமயந்தியிலும் மாதவன் ஒரு அப்பாவிப் பார்ப்பனர்தான் என்பதையும் இங்கே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கமல் கடவுளை நம்பாதவராக இருக்கலாம். ஆனால் பார்ப்பனியம் கொண்டிருக்கும் முகங்களில் பலவற்றை கமலும் கொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கு பிரச்சனை. கமலை ஒரு முற்போக்குவாதி என்று உறுதியாகச் சொல்பவர்கள் இதை மறுத்து பல உதாரணங்களைக் காட்டக் கூடும். கமல் பெண்கள், பாலியல் போன்ற விடயங்களில் முற்போக்காகச் சிந்திப்பவர் என்று பலர் கருதுகிறார்கள். “நாயகன்” திரைப்படத்தில் கமல் பாலியல் தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வருகின்ற காட்சியை உதாரணமாகச் சொல்பவர்கள் இருக்கின்றார்கள். “மும்பை எஸ்பிரஸ்” திரைப்படத்தில் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருந்த ஒரு பெண்ணை கமல் திருமணம் செய்வது போன்று வரும்.

இப்படியான காட்சிகளின் மூலம் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உழுத்துப்போன பாரம்பரியங்களை உடைப்பதற்கு கமல் முயல்கின்றார் என்கின்ற கருத்து பலரிடம் உண்டு. ஆனால் இந்தக் காட்சிகளை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் எவ்வித அதிர்வுகளையோ நெருடல்களையோ ஏற்படுத்தவில்லை. வெகு இயல்பாக பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

நாயகன் திரைப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்பவன் ஒரு தாதா. கடத்தல்களையும் கொலைகளையும் செய்கின்ற ஒருவன், அதாவது சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒருவன் சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றான். சோடிப் பொருத்தம் சரியாக இருக்கின்றது. பார்வையாளனும் இயல்பாக அதை ஏற்றுக்கொள்கிறான்.

மும்பை எஸ்பிரஸ் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு திருடன். ஒரு திருடன் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருக்கின்ற ஒரு நடனப் பெண்மணியை திருமணம் செய்வது பற்றியும் எந்தப் பார்வையாளனும் ஆட்சேபிக்கப் போவது இல்லை. கமல் தன்னை ஒரு “ஹீரோ” என்கின்ற வட்டத்தைத் தாண்டி படத்தில் வரும் பாத்திரமாக பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வைப்பதில் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆகவே ஒரு ஹீரோ பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்றான் என்ற காட்சியை விட, ஒரு கடத்தல்காரன் ; ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்ற காட்சியே அங்கே முன்னிற்கிறது. இதில் எங்கே இருக்கிறது புரட்சி… இன்ன பிற?

கமல் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ள முயன்றாலும், கடைசியில் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையோடு சமரசம் செய்து கொள்கிறார். கமல் பலரால் போற்றப்படுவதற்கு காரணமான எத்தனையோ விடயங்கள் உண்மையில் அப்படி அல்ல என்பதை சுட்டிக் காட்டவே “நாயகன்”, “மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற உதாரணங்களை கூறினேன். இப்பொழுது மீண்டும் பார்ப்பனியம் சார்ந்த விடயத்திற்கு வருவோம்.

தசாவதாரம் படத்தின் மூலம் பார்ப்பனிய நலன் சார்ந்த ஒரு அரசியலுக்கு கமல் துணை போகின்றார். பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு திரைப்படத் துறையில் பார்ப்பனிய சக்திகள் அதிகரித்த வகையில் செய்து வருகின்ற இந்த அரசியலை கமலும் செய்கிறார். அது என்ன?

தொடரும்….

- வி.சபேசன்

Friday, July 04, 2008

கமலின் பார்ப்பனிய முகம்

தசாவதாரம் - பலராலும் பல விதமாக விமர்சிக்கப்பட்டு விட்டது. என்னுடைய பங்கிற்கும் தசாவதாரம் படத்தைப் பார்த்த பொழுது, பார்த்து முடித்த பின்பு எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

கமல் மீது எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. தம்மைப் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்கின்ற பார்ப்பனர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு தம்முடைய உண்மையான பார்ப்பனிய முகத்தை காட்டி விட்டுப் போயிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகள் கமலைப் பார்க்கின்ற பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கும்.

ஆரம்பத்தில் முற்போக்குச் சிந்தனைகளோடு கதைகளை தந்த சுஜாதா கடைசியில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த பொழுது பார்ப்பனிய சக்திகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டார். பார்ப்பன சங்கத்தில் முழக்கமிடவும் செய்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கையுடையவராக தன்னை அறிமுகம் செய்த மணிரத்தினம், பார்ப்பன இந்துத்துவ நலன் சார்ந்த திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார். 39 வயதை அடைவதற்குள் இறந்து விட்ட பாரதி கூட ஆங்காங்கே தன்னுடைய பார்ப்பனிய சிந்தனைகளை வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்.

எம்மவர் என்று கருதப்பட்ட எழுத்தாளர் ஞானியும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டாரா என்ற சந்தேகம் வருகின்ற அளவிற்கு அவருடைய இன்றைய எழுத்துக்கள் சில அமைகின்றன.

சுஜாதா போன்றவர்களின் சேர்க்கையால் ஏற்பட்ட விளைவோ தெரியவில்லை, கமலும் தன்னுடைய பார்ப்பனிய முகத்தை மெதுமெதுவாக வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அண்மைக் காலமாக நான் சந்தேகப்படுகின்றேன். தசாவதாரம் திரைப்படமும் அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

கமல் ஒரு சிறந்த கலைஞன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தசாவதாரம் படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது. மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். கமல் கடைசியாக திரைக்கதை அமைத்த சில படங்கள் வெற்றி அடையாத போதும், தசாவதாரத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு சிறந்த திரைக்கதை அமைப்பாளராக கமல் நிரூபித்திருக்கிறார்.

சுனாமி வருகின்ற பொழுது கடற்கரையில் நிற்கின்ற ஜப்பானிய கமல் “சுனாமி மீண்டும் வருகிறது” என்று கத்துவார். ஒரு ஜப்பானியனைத் தவிர வேறு யார் அந்த இடத்தில் நின்றிருந்தாலும் இந்த வசனம் பொருந்தியிருக்காது. டிசம்பர் 2004 வரை தமிழர்கள் இலக்கியங்களில் வருகின்ற கடற்கோள்கள் பற்றி படித்திருக்கிறார்களே தவிர, சுனாமியை கண்டது இல்லை. (சுனாமி வருவதற்கு முன்பே கமல் தன்னுடைய “அன்பே சிவம்” படத்தில் சுனாமி பற்றி பேசியிருப்பார்.) ஜப்பானில்தான் அடிக்கடி சுனாமி வருவது உண்டு. “சுனாமி” என்ற சொல்லே ஜப்பானிய சொல்தான்.

சுனாமி வருவதை சொல்கின்ற ஜப்பானிய கமல் எவ்வித திணிப்பும் இன்றி, படத்தைப் பார்ப்பவர்களுக்கும் எவ்வித நெருடலும் ஏற்படாத வண்ணம் அங்கே வந்து சேர்கிறார். இப்படி படத்தில் வியப்பதற்கு பல விடயங்கள் உண்டு. முக்கியமாக கமலுடைய உடல்மொழியை சொல்ல வேண்டும்.

படத்தில் “மேக்அப்” படுமோசம் என்று படம் பார்த்த எல்லோரும் சொல்லி விட்டார்கள். முகமூடிகளை மாட்டியது போன்று இருக்கிறது. இந்தியன் திரைப்படத்தில் ஏற்பட்ட பிரமிப்பு தசாவதாரத்தில் ஏற்படவில்லை. சிரிப்புத்தான் வந்தது. முகமூடி போட்டது போன்ற “மேக்அப்” காரணமாக முகம் நடிக்க முடியாது போக, தன்னுடைய உடல்மொழி நடிப்பால் அந்தக் குறையை கமல் சமன் செய்கிறார். அமெரிக்க வில்லன், மனநலம் குன்றிய பாட்டி, தலித் தலைவர், ஜப்பானியர் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றபடி கமலின் உடல்மொழி அமைகிறது. ஜப்பானிய கமல் சற்றுக் குள்ளமாக தெரிவதன் காரணம் கூட கமலின் நடிப்பே.

தசாவதாரம் படம் பற்றி எழுதுவதை விட கமலின் பார்ப்பனிய முகம் பற்றி எழுதுவதே என்னுடைய நோக்கம் என்பதால், படம் பற்றி எழுதுவதை குறைத்துக் கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

கமல் பார்ப்பனிய சிந்தனைக்கு எதிரான ஒருவர் என்பதுதான் பலருடைய கருத்து. பார்ப்பனர்களை மறைமுகமாகச் சாடுகின்ற காட்சிகளை தன்னுடைய படங்களில் அவர் வைத்திருக்கின்றார். தேவர்மகன் படத்தில் கூட இரண்டு சகோதரர்களின் பகையில் வயிறு வளர்க்கின்ற ஒரு பார்ப்பனப் பாத்திரத்தை படைத்திருப்பார். நடிகர் மதன்பாப் செய்த அந்தப் பாத்திரம் இரண்டு சகோதரர்களின் பகையை அதிகரிக்கின்ற கைங்கர்யங்களிலும் ஈடுபடும்.

மகாநதியில் ஒரு பார்ப்பனர் (பூர்ணம் விஸ்வநாதன்) உலகில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு பேசாது இருப்பார். அக்கிரமத்திற்கு எதிராக போராடுகின்ற குணத்தோடு கமல் தோன்றுவார். இப்படி வெளிப்படையாக இல்லையென்றாலும் பார்ப்பனர்களை மறைமுகமாக என்றாலும் தன்னுடைய படங்களில் கமல் தோலுரித்திருக்கிறார்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் பார்ப்பனர்களுக்கு உதவுவதற்கு “நான் இருக்கிறேன்” என்று புஜபலத்தை காட்டியபடி வெளிப்படையாகவே வந்து குதித்தார் கமல்.

தொடரும்….

http://www.webeelam.net