Thursday, January 24, 2008

ஒரு மொழியின் இறப்பு

ஒரு மொழியின் இறப்புகடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார்.

ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. கடந்த திங்கட் கிழமையோடு உலகில் ஒரு மொழி அழிந்து விட்டது.

மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.

"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை.

"ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.

ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை.

ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன.

இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.

வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது. எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது.

வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது.

தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன.

ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

http://www.webeelam.com

Monday, January 14, 2008

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம்.

இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள்.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்று படித்தவர்கள் கூட அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு மதவெறி ஒரு முக்கிய காரணம். இதனோடு சாதிவெறியும் ஒரு காரணம். சாவுவீட்டில் நடக்கின்ற சம்பிரதாயங்களுக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் ஆச்சரியப்படலாம். சம்பந்தம் இருக்கிறது. இதைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன் அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஒரு கூத்தைப் பார்ப்போம்.

சில வாரங்களுக்கு முன்பு டென்மார்க்கில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கான இறுதி நிகழ்வுகளை நடத்தித் தர ஒரு பார்ப்பனரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். தன்னுடைய சாதிப் பிரிவு அதைச் செய்வது இல்லை என்றும், பார்ப்பனர்களில் உள்ள "சைவஐயர்" என்னும் பிரிவுதான் சாவுவீட்டில் இறுதி நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அப்படி செய்யவில்லையென்றால் தான் 31ம் நாள் நிகழ்வுகளை செய்து தரமாட்டேன் என்றும் சொல்லி விட்டார். அவர் ஆலயங்களில் பூசை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களை ஈழத்தில் "சிவாச்சாரியார்கள்" என்று சொல்வார்கள்.

இறந்தவரின் உறவினர்கள் "சைவஐயரை" தேடி கடைசியில் லண்டனில் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஏறக்குறைய 1000 யுரோக்களை கூலியாகக் கேட்டார். அத்துடன் இறுதி நிகழ்வுகளுக்கு தேவையானவை என்று மிக நீளமான பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து அவரை லண்டனில் இருந்து வரவழைத்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.

இனிமேல் இறப்பு ஏதாவது நடந்தால் லண்டனில் இருந்துதான் "சைவஐயரை" அழைக்க வேண்டும் என்பதால், டென்மார்க்கில் உள்ள சில தமிழர்கள் கூடி இதற்காக ஒரு சங்கம் அமைத்துள்ளார்கள். தமிழுக்கு சங்கம் அமைத்த காலம் போய், இன்றைக்கு ஐரோப்பாவில் செத்த வீடு செய்வதற்கு சங்கம் அமைக்கின்ற அளவிற்கு தமிழன் வந்து விட்டான்.

இந்தச் சங்கத்தின் மூலம் தமிழர் கலாச்சாரப்படி இறுதி நிகழ்வுகள் செய்ய என்று சொல்லி டென்மார்க் அரசிடம் பணம் பெற்று, அதன் மூலம் "சைவஐயரால்" ஆகும் செலவை ஈடு செய்வதுதான் அவர்கள் திட்டம்.

இந்தச் சங்கத்தை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னார், "நான் ஒரு செத்த வீட்டிற்கு கொள்ளிப் பானை கொத்தினேன், அதன் பிறகு எல்லோரும் என்னைத்தான் கொள்ளிப்பானை கொத்தக் கூப்பிடுகிறார்கள், நாங்கள் என்ன அந்த ஆட்களோ?". இப்படி கோபமாகவும் வருத்தமாகவும் கேட்ட அவர் நிறையப் புரட்சிக் கவிதைகளை எழுதுபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கத்தின் நோக்கம் டென்மார்க் அரசிடம் இருந்து பணம் பெறுவது மட்டும் அல்ல. சாதியையும் கட்டிக் காப்பதுதான். தனியாளாக கொள்ளிப் பானை கொத்தினால், அவர்களுடைய சாதி மானம் போய் விடுமாம். சங்கத்தின் பெயரில் கொத்தினால், அது பறவாயில்லையாம்.

சாவு வீட்டிற்கு சைவஐயரை அழைத்து 31ஆம் நாள் நிகழ்விற்கு சிவாச்சாரியர்களை அழைத்து, பார்ப்பன வர்ணத்தில் உள்ள சாதிகளின் இருப்பையும் பிழைப்பையும் காப்பதோடு, வேளாள சாதியினரின் ஆதிக்கத்தின் அடையாளத்தையும் தக்க வைப்பதே இந்த சங்கத்தின் நோக்கம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இந்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை சந்திக்கின்றார்கள். பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா, திருமணம் என்று நிறைய நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றர்கள். ஆனால் ஒரு சாவு நிகழ்வில் வெளிப்படுவது போன்று வேறு எந்த நிகழ்விலும் சாதிகளின் இருப்பு வெளிப்படுத்தப்படுவது இல்லை.

ஒரு சாவின் போது சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து வெள்ளை கட்டுவார்கள். பறை அடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பறை அடிப்பார்கள். இறந்தவரின் மகனுக்கு மொட்டை அடிக்கும் வேலையோடு, வேறு சிறு வேலைகள் செய்வதற்கு முடி வெட்டும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். பூசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய "சைவஐயர்" சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இடுகாட்டில் விறகுகளை வெட்டியான் சமூகத்தை சேர்ந்தவர் அடுக்கி வைப்பார். இத்தனை சாதிகளும் வந்து போன பின்னர் 31ஆம் நாள் "சிவாச்சாரியார்கள்" வருவார்கள்.

இதுதான் இந்து சம்பிரதாயப்படி நடக்கின்ற சாவு ஒன்றின் இறுதி நிகழ்வு. ஒரு சாவு நிகழ்வில் கூட மனிதர்களுக்குள் பல சாதிகள் உண்டு என்பதையும், அவர்களுக்கு என்று தனியான தொழில்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தச் சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பன உண்டு என்பதையும் வெளிப்படுத்தும் மனிதத்திற்கு விரோதமான ஒரு சம்பிரதாயமே இந்த இந்து மதச் சம்பிரதாயம் எனப்படுவது.

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த சம்பிரதாயங்களை அப்படியே நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேளாள பார்ப்பனிய சாதி வெறியனருக்கு ஒரு குறையாகவே இருக்கின்றது. இதனால் சங்கங்கள் அமைத்து "இந்து சம்பிரதாயம்" என்ற பெயரில் சாதிகளின் இருப்பை முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றார்கள்.

சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கும் இந்த சாதி வெறியர்கள் தயாராக இல்லை. மிகவும் உணர்வுபூர்வமானதாக கருதப்படும் தாலி விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதானது, பின்பு மற்றைய விடயங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஒரு உந்துகோலாக அமைந்து விடும் என்பதுதான் இவர்களுடைய முக்கிய அச்சம்.

சாம்பல் கரைப்பதற்கு சைவஐயர்கள் வரவேண்டும் என்பதும் 31ஆம் நாள் சிவாச்சாரியார் வரவேண்டும் என்பதும் சம்பரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. தாலியை அணிந்தபடி வந்து பின்பு தாலியை கழற்றி கணவனின் பிணத்தின் மீது வைக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. ஒரு சம்பிரதாயத்தை முற்றிலும் இல்லாமல் செய்வது என்பது மற்றைய சம்பிரதாயங்களையும் காலப் போக்கில் இல்லாமல் செய்து விடக் கூடும். இதனால் சாதிவெறி பிடித்தவர்கள் சம்பிரதாயங்களை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள்.

ஒரு புறம் பெண்கள் மறுமணம் செய்யக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை, மறுபுறம் இந்தச் சம்பிரதாயங்களை நீக்கி விட்டால் இந்து மதத்தில் வேறு ஒரு மண்ணும் இல்லையே என்ற கவலை, இன்னொரு புறம் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனம், இவைகள் எல்லாம் சேர்ந்துதான் இவர்களை "சம்பிரதாயம்" என்று கூக்குரல் இட வைக்கின்றது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கச் செய்கிறது.

http://www.webeelam.com

Tuesday, January 08, 2008

சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்!

அண்மையில் ஜேர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் சாவு ஒன்றின் இறுதி நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்களில் பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. சாவடைந்தவரின் மனவியிடம் இருந்து தாலியை சிலர் பலவந்தமாக கழற்றியதாக சொல்லப்படுகின்ற சம்பவமே பரபரப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த ஒரு ஊடகவியலாளர் மிகுந்த வேதனையோடு நடந்தவற்றை விபரித்தார்.

"அந்தப் பெண்ணை மிகவும் மெல்லிய சேலை ஒன்றை உடுத்தி கடும் குளிரில் அழைத்து வந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை விரதம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரைச் சாப்பிடக் கூட விடவில்லை. கணவரை இழந்த சோகத்தாலும், சுற்றத்தாரின் துன்புறுத்தல்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரை தாலியைக் கழற்றி கணவரின் உடல் கிடந்த பெட்டியின் மேல் வைக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண் தாலியைக் கழற்ற மறுத்துவிட்டார். தாலியைக் கழற்றி வைத்தால்தான் கணவரின் ஆத்மா சந்தியடையும் என்று சிலர் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்கள். அந்தப் பெண் தாலியைக் கழற்ற மாட்டேன் என்று உறுதியாக நின்றார்.

ஐயோ..எழும்பிப் பாராப்பா....கழட்ட வேண்டாமெண்டு சொல்லப்பா....நானென்ன பாவம் செய்தனான்.....உன்னோட வாழ்த்தானே வெளிநாடு வந்தனான்.....எனக்கேனிந்த நிலை....நான் கழட்டிப் போடுறதுக்காக அவர் எனக்கு இதைக் கட்டயில்லை....நான் போடத்தான் இதைக் கட்டினவர்....நான் கழட்ட மாட்டேன்....என்னை விடுங்கோ....ஐயோ என்னை விடுங்கோ.....ஐயோ கடவுளே ஏனிப்படி ஒரு சம்பிராதயத்தை படைச்சனி.....அவருடைய உருக்கமான கதறல் யாருடைய மனத்தையும் தொடவில்லை. நான் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகப் பேசியும் அவர்கள் தாலியைக் கழற்றுவதில் பிடிவாதமாக நின்றார்கள்.

அதன் பிறகு நடந்ததுதான் மிகப் பெரிய கொடுமை. சில பெண்கள் அவரை இறுகப் பிடித்துக் கொள்ள, ஒருவர் அவருடைய தாலியை பலவந்தமாகக் கழற்றினார். அந்தப் பெண் கதறித் துடித்தும் சம்பிராதயம் என்ற பெயரில் இப்படியான ஒரு ஈனச் செயலைப் புரிந்தார்கள்"

அந்த ஊடகவியலாளர் இவைகளை விவரிக்க நாம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றோம். அந்த சம்பிரதாயக் கொடுமை அத்துடன் முடியவில்லை.

இறந்தவரின் உடலை தகனம் செய்கின்ற அறைக்குள் கொண்டு சென்ற பின்பு அவருடைய உடலை எரிப்பதற்கான மின் அழுத்தியை இறந்தவரின் ஒன்பது வயதை மகனை அழுத்தச் சொன்னார்கள். அந்தச் சிறுவன் தந்தையின் உடலை எரிக்க மாட்டேன் என்று கதறி அழுதான். எரிக்காவிட்டால் அப்பா பேயாக வருவார் என்று பயமுறுத்தி அந்தச் சிறுவனை மின்அழுத்தியை பலவந்தமாக அழுத்தச் செய்தார்கள்.

இந்தச் சம்பவங்களால் அங்கே நின்றிருந்த ஜேர்மனியர்களும், மற்றைய இனத்தவர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டார்கள். தம்முடைய நாட்டில் இருந்து கொண்டு சம்பிரதாயம் என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து ஜேர்மனியர் ஒருவர் கடும் விசனப்பட்டார். மிகவும் பின்தங்கியுள்ளதாக கருதப்படுகின்ற தங்களுடைய நாடுகளில் கூட இது போன்ற கொடுமைகள் இடம்பெறுவது இல்லை என்று அங்கே நின்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை. எம்மோடு பேசிய அந்த ஊடகவியலாளர் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்ந்திருந்தார். இதை அடுத்து அவர் சிலரால் மிரட்டப்பட்டார். மர்ம தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொல்லைப்படுத்தப்பட்டார். இதையடுத்து தற்பொழுது இப் பிரச்சனை காவல்துறை வரை சென்றுள்ளது.

நடந்த நிகழ்வுகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதால், அனைத்திற்கு ஆதாரம் இருக்கின்றன. தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட காட்சி அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது. வீடியோ தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சனை மனித உரிமை சார்ந்த சில அமைப்புக்களின் கவனித்திற்கும் போயிருக்கிறது. கணவனை இழந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தாலியை பலவந்தமாக கழற்றியது, ஒன்பது வயதுச் சிறுவனை தந்தையை எரிப்பதற்கான மின்னழுத்தியை அழுத்தச் செய்தது போன்றவைகள் மிகவும் பாரதூரமான விடயங்கள். இப் பிரச்சனை நீதிமன்றம் செல்லுமிடத்து, இச் செய்கைகளுக்கு தூண்டியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படக்கூடிய நிலைமையே தற்பொழுது காணப்படுகின்றது.

சம்பிரதாயம் என்று பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்பதே தமிழருடையதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தாலிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பல தமிழறிஞர்கள் ஆதாரங்களை தருகின்றார்கள். தமிழர்களிடம் தாலி இருந்தது என்று வாதிடுபவர்கள் கூட "தாலி ஒரு முக்கியமான புனிதமான ஒன்றாக இருந்தது இல்லை" என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழர் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இவ்வாறான அத்துமீறல்களை செய்வது முட்டாள்தனமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

இந்து மதச் சம்பிரதாயம் என்று சொல்லி ஒரு காலத்தில் பெண்களை உடன்கட்டை ஏற வைத்தார்கள். உடன்கட்டை ஏறிய பெண்களை "சதி" என்று சொல்லி வழிபடுவும் செய்தார்கள். இந்து மதத்தினுடைய காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை பின்பு ஆங்கிலேய அரசு தடை செய்தது.

ஆனால் காட்டுமிராண்டி இந்து மதச் சம்பிரதாயங்களில் மிச்சம் உள்ள சம்பிராதயங்களாகிய "தாலியறுப்புக்கள்" போன்றவை தொடர்கின்றன.

இதை புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் செய்வது மாபெரும் வெட்கக்கேடு. முன்னேறிய நாகரீகமான ஒரு இனம் என்று பெருமையாக தன்னை சொல்வதற்கு தமிழினத்திற்கு ஏதாவது அருகதை உண்டா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பாரதி சொன்னது போன்று பெரும்பாலான தமிழர்கள் "எருமைகளாகவே" இருக்கின்றார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் சான்று.

இச் சம்பவம் ஏதோ ஒரு இடத்தில் ஒரேயொருவருக்கு மட்டும் நடந்துள்ளது என்று இதை அலட்சியப்படுத்த முடியாது. கணவரை இழந்த பெரும்பாலான பெண்களுக்கு இந்தக் கொடுமை எல்லா இடங்களிலும் நடக்கின்றது. கணவரின் இறுதி நிகழ்வில் தாலியைக் கழற்றச் சொல்லி, சம்பிரதாயத்தின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவது பல இடங்களில் நடக்கின்றது. பெண்கள் உரிமை என்று வாய் கிழியப் பேசுகின்ற யாரும் இதைப் பற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

தாலி என்பது உலோகப் பொருள் ஒன்றினால் செய்யப்பட்ட ஒரு ஆபரணம். அதற்கு உயிரோ, புனிதமோ, ஒரு மண்ணும் கிடையாது. அதை வைத்துக் கொண்டு இத்தனை அடாவடித்தனம் செய்வது அடி முட்டாள்தனமானது. தாலி என்பதை "அன்புச் சின்னம்" என்று சிலர் சொல்வார்கள். அது உண்மையெனில் கணவன் மீதான அன்பு இருக்கும் வரை அந்த தாலியை அப் பெண் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை. கழற்ற வேண்டுமா என்பதையும் அப்படி கழற்ற வேண்டுமென்றால் அதை எப்பொழுது கழற்ற வேண்டும் என்பதை தாலியை அணிந்திருக்கும் பெண்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுற்றியிருப்பவர்கள் அல்ல.

இந்த காட்டுமிராண்டித்தனங்கள் தொடருமாயின் இவைகளை வெளிநாட்டு ஊடகங்களினதும் சட்டத்தினதும் கவனத்திற்கும் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி இருக்கப் போவதில்லை.

- நமது நிருபர்கள்

http://www.webeelam.com

Friday, January 04, 2008

புத்தாண்டில் சிங்களத்தின் நடவடிக்கைகள்

2008ஆம் ஆண்டில் தமிழின அழிப்பை தீவிரப்படுத்தவதற்கு சிங்களம் முழு அளவில் தயாராகி வருகின்றது. புத்தாண்டு பிறந்த முதல் நாளில் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான குரல் ஒன்றை நசுக்கியது. இரண்டாம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுகின்ற முடிவை எடுத்தது. மூன்றாம் நாள் அந்த முடிவை உத்தியோகபூர்வமாக நோர்வேக்கு அறிவித்துது.

புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கொழும்பில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தி தமிழ் மக்கள் மத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்துள்ளது.

மகேஸ்வரன் குறித்த காட்டமான விமர்சனங்கள் பல மட்டங்களில் உண்டு. யுத்தத்தை தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர், சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றில் அங்கம் வகித்தவர் போன்றவை மகேஸ்வரன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானவை. ஆயினும் அவர் சிங்களப் அரசினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பாலான தமிழ் மக்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது.

யாழ் குடா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பொழுது, சிறிலங்கா அரசு யாழ் குடா மீது கடும் பொருளாதாரத்தடை விதித்திருந்தது. எரிபொருட்கள் பெறுவது மிக கடினமாக இருந்தது. இந்த நிலையில் யாழ் குடாவிற்கு பல வழிகளில் கொண்டு வரப்பட்ட எரிபொருட்களை மகேஸ்வரன் விற்பனை செய்தார். வர்த்தகத்துறையில் அவருடைய வளர்ச்சிக்கு இதுவே பெரும் காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையை அவர் தன்னுடைய வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொண்டது உண்மைதான். இதைக் குத்திக்காட்டுவதற்கு மகேஸ்வரனின் எதிரிகள் அவரை "மண்ணெண்ணய் மகேஸ்வரன்" என்று அழைப்பதும் உண்டு. ஆனால் தன்னுடைய உயிர் பிரியும் வரை தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்றதை அவர் செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வர்த்தகத் துறையில் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2001ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு அமைச்சராகவும் ஆனார்.

அப்பொழுது சந்திரிகா அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இவைகளை விட மகேஸ்வரனின் வெற்றிகளுக்கு அவருடைய தனிப்பட்ட செல்வாக்கே முக்கிய காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையின் போது மக்களுக்கு அத்தியாவசியமான எரிபொருட்கள் ஓரளவாவது கிடைப்பதற்கு வழி செய்தவர் என்ற வகையில் அவர் யாழ் குடா மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்டனக் குரலை எழுப்பி வந்திருந்தார். இவைகளே யாழ் குடாவில் மகேஸ்வரனின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

2004ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகேஸ்வரன் யாழ் குடாவில் போட்டியிடவில்லை. தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை தமிழீழ மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற சிறிலங்காவின் கட்சிகள் தமிழர் தாயகத்தில் வெற்றி பெறக் கூடாது என்ற முடிவில் தமிழீழ மக்கள் இருந்தனர்.

இதனையடுத்து மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும், மகேஸ்வரன் ஒரு போதும் தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. பாராளமன்றத்தில் தமிழீழத்தை ஆதரித்து முழக்கம் இடுபவர்களில் மகேஸ்வரன் முக்கியமானவர். அவர் சார்ந்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சி அவசர காலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தாலும், மகேஸ்வரன் மட்டும் எதிர்த்தே வாக்களிப்பார்.

கொழும்பில் வாழும் தமிம் மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து வந்த மகேஸ்வரன் மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கும், ஒட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கும் எதிரான கண்டனங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். அண்மையில் தமிழ் மக்கள் பெரும் தொகையில் கைது செய்யப்பட்ட போது, அவர்களை விடுவிப்பதற்கு பலவகையில் மகேஸ்வரன் போராடியிருந்தார். மகிந்த அரசின் அடக்குமுறைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவதில் மகேஸ்வரன் முன்னிலையில் நின்றார்.

கடைசியாக தொலைக்காட்சி ஒன்றில் மகிந்தவின் அடக்குமுறைகள் குறித்தும், யாழ் குடாவில் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் பற்றியும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்விற்கு இரண்டு நாள் கழித்து சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரால் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி இனம் காணப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் புலனாய்வுத்துறையே இப் படுகொலைக்கு பின்னால் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் கட்டிலில் ஏறிய காலத்தில் இருந்து தனக்கு எதிரானவர்களை மிரட்டியும், கொலை செய்தும் இல்லாதொழித்து வருகின்றார்.

ஜோசப் பராரஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கடத்தியும், மிரட்டியும் பணிய வைக்க மகிந்தவின் அரசு முயன்று வருகின்றது. மனோ கணேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளிலேயே கழிக்கிறார்கள்.

இவைகளை விட சென்ற ஆண்டில் மிக அதிகளவு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மகிந்தவிற்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகளும் பல வகைகளில் மிரட்டப்படுகின்றார்கள். ராஜபக்ஸ குடும்பத்தின் கொடிய சர்வாதிகார ஆட்சியை நோக்கி இலங்கைத் தீவு வேகமாக சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகின்றது.

இத்தகைய சர்வாதிகார ஆட்சியை தக்க வைப்பதற்கு யுத்தம் அவசியமானது என்று மகிந்த ராஜபக்ஸ கருதுகின்றார். சிங்களத்தின் அரசியல் என்பது யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. யுத்தம் செய்வதன் மூலம் மாத்திரமே மகிந்தவால் தன்னுடைய கொடிய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட முடியும்.

தற்பொழுது மகிந்த ராஜபக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக சிங்கள மக்களுக்கு மகிந்த வாக்குறுதி அளித்திருந்தார். வரவு செலவு திட்டத்தின் போது ஜேவிபி வாக்களிப்பில் கலந்து கொள்ளது இருப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், விடுதலைப் புலிகளை தடை செய்வதாகவும் ஜேவிபியிடம் மீண்டும் ஒருமுறை உறுதியளித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள மகிந்த அரசு விரைவில் விடுதலைப் புலிகளை தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் நேர்வேக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டப்படி முடிவுக்கு வருகின்றது. அதற்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ வன்னி மீது சிறிலங்கா அரசு பெரும் தாக்குதலை நடத்தும் என்று நம்பலாம்.

விடுதலைப் புலிகளை போரில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையே சிறிலங்கா அரசின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும். கடந்த பத்து மாதங்களாக மன்னார், மணலாறு, முகமாலை போன்ற முனைகளில் முன்னேறுவதற்கு சிறிலங்கா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற சில நூறு படையினருடன் இந்த நகர்வு முயற்சிகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசு, அது பலனளிக்காத நிலையில் சில ஆயிரம் படையினரை பயன்படுத்தி முன்னேறும் முயற்சிகளை மேற்கொண்டது. அம் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயன்படுத்தி வன்னி மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கான ஏற்பாடுகைளை விரைவாக செய்து வருகின்றது.

தமது விசேட படையணிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையின் பெரும் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வலிந்து தாக்குதலை மேற்கொள்வதை விட, வன்னிக்குள் நுழையும் சிறிலங்காப் படைகளை சின்னாபின்னப்படுத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருக்கக்கூடும். அதன் பிறகே விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்கள் இடம்பெறலாம்.

எழுத்தில் மட்டும் இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு ரத்து செய்து விட்டது. இது நாள்வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளே குழப்பியதாக சர்வதேசம் குற்றம் சாட்டிவந்தது. ஆனால் இம் முறை நடந்த பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் அசாத்தியப் பொறுமை சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை அர்த்தமற்றதாக்கி விட்டது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்களை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா அரசு மூழ்கடித்தது. பின் தன்னுடைய ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. மாவிலாற்றுப் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்து கொண்டிருந்த போதே தமிழ் மக்கள் மீது வான்தாக்குதலை நடத்தியது. பின்பு நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டது. தற்பொழுது எழுத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டது.

சிறிலங்கா அரசு எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, பின் அதை இல்லாமலும் செய்தது என்பது குறித்த பரப்புரைகளை பெரும் எடுப்பில் முன்னெடுக்கவும், சிங்கள அரசின் பெரும் தாக்குதலுக்கு முகம் கொடுக்கவும் உலகத் தமிழினம் தயாராக வேண்டும். வர இருக்கும் போரின் முடிவே சர்வதேசத்தின் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை தமிழினம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

http://www.webeelam.com/