Tuesday, May 30, 2006

"தி இராவணன் கோட்" (The Ravana Code)

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான். இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு. அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது. ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது. காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.
- வி.சபேசன் (22.05.06)

தடைகளும் பரப்புரைகளும்!

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகள் மீது தடை கொண்டு வரப்போவதாக செய்திகள் வருகின்றன. சில வேளைகளில் இக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் தடை வந்திருக்கலாம். தடை வரும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை. மேற்குலக நாடுகளின் நலன்களே இதுவரை போடப்பட்ட தடைகளுக்கும், இனிமேல் போடப்போகின்ற தடைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. மேற்குலகின் நலன்களும் தமிழீழத்தின் நலன்களும் ஒன்றுபடும் வரையோ அல்லது தமிழீழமானது வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை மேற்குலகம் உணரும் வரையோ இந்தத் தடைகள் விலக்கப்படப் போவதில்லை.
ஆனால் இந்தத் தடைகள் குறித்து சில வாரங்களிற்கு முன்பு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்கின்ற பரப்புரையின் பலவீனமே இந்தத் தடைகளுக்கு காரணம் என்னும் சாரப்பட அவரது கட்டுரை அமைந்திருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுத்தாற்றல் காரணமாகவும், அவர் கொண்டிருக்கும் சமூக, இலக்கிய அந்தஸ்தின் காரணமாகவும், அவரது கட்டுரை ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து ஒரு வானொலியும் அவரிடம் செவ்வி கண்டது. அதன் போதும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையின் பலவீனமே தடைகளுக்கு முக்கிய காரணம் என்று தன்னுடைய கருத்தை வலியுறுத்திக் கூறினார். பேராசிரியரை செவ்வி கண்டவர் தடுமாறிப் போய் "பூனைக்கு மணி கட்டுவது யார்" என்று கேட்கின்ற அளவிற்கு பேராசிரியரின் கருத்துக்களின் தாக்கம் இருந்தது. செவ்வி கண்டவருக்கு "பூனை யார்? மணி யார்? கட்டுவது யார்?" என்பதில் தெளிவு இருக்கவில்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆனால் பேராசிரியரின் பரப்புரை குறித்த கருத்தில் பாதி சரியாகவும் பாதி தவறாகவும் இருக்கின்றது என்பதுதான் உண்மை. புலம்பெயர் நாடுகளில் பரப்புரை மிகவும் பலவீனமாக இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதுதான் தடைகளுக்கு காரணம் என்று சொல்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராசிரியரின் இந்தத் தவறான கருத்து பிரச்சனையை திசை திருப்பி விட்டதிலேயே போய் முடிந்திருக்கிறது. பேராசிரியர் தடைகளையும் பரப்புரைகளையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தியது தவறு என்பதை தெளிவுபடுத்த சில விடயங்களைக் கூறுகிறேன்.
1960களிலும் 70களிலும் மேற்குலக நாடுகளில் பாலஸ்தீனியர்கள் செய்யாத பரப்புரைகளே இல்லை. மிகப் பெரும் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் என்று அனைவருடனும் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அந்தந்த நாட்டு மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். வெளிப்படையான அலுவலகங்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு பேச்சாளர் இருந்தார். அவரால் அந்த நாட்டின் பிரதமர் வரை பேச முடிந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளின் மக்கள் மத்தியில் இஸ்ரேலை விட பாலஸ்தீனியர்கள் மீதே ஆதரவு மிகுந்திருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாபம் யூதர்கள் மீது இருந்தாலும், பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் அந்த அனுதாபத்தை உடைத்தது. ஆனால் இவ்வாறு பரப்புரைகளில் மிகவும் பலமாக இருந்த அவர்களால், தமது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான தடைகளை தடுக்க முடியவில்லை. (வெளிப்படையாக இயங்கிய பாலஸ்தீன இயக்கத்தின் பேச்சாளர்கள் பலர் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவான மொஸாட்டால் கொல்லப்பட்ட பரிதாபம்தான் நிகழ்ந்தது) பாலஸ்தீனியர்களின் பக்கம் இருந்த நியாயத்தை மேற்குலகம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தாலும், தமது நலன் கருதி அவர்கள் இஸ்ரேலின் பக்கம்தான் நின்றார்கள். பாலஸ்தீனியர்களுக்கு தடைகளைப் போட்டார்கள். பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும், அவர்கள் அவர்களது சொந்த நாட்டில் பலவீனமாக இருப்பதால், இன்று அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தைக்கூட மேற்குலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதே போன்று ஈராக் யுத்தத்தை எடுத்துக் கொள்வோம். ஈராக் யுத்தத்திற்கு எதிரான பரப்புரைகள் போன்று அண்மைக்காலத்தில் எந்த ஒரு பரபரப்புரையும் நிகழ்த்தப்படவில்லை. சொந்த நாட்டு மக்கள் விரும்பாத போது கூட மேற்குலகம் ஈராக் மீது படை எடுத்தது. ஈராக் மீது படை எடுப்பை மேற்கொண்ட நாடுகளின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமது நாடுகளில் பரபரப்புரைகளை மேற்கொண்டார்கள். இன்றுவரை அவர்களின் பரபரப்புரைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகள் பல தமது ஈராக் பற்றிய அன்றைய முடிவு தவறானவை என்று இப்பொழுது ஏற்றுக்கொண்டாலும், தமது படைகளை தொடர்ந்து ஈராக்கில் வைத்திருக்கின்றன.
பரபரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும் பாலஸ்தீன இயக்கத்தின் மீது போடப்பட்ட தடைகளும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், மேற்குலகின் நலன்களுக்கு முன்னால் எந்தவிதமான பரபரப்புரைகளும் செல்லுபடியற்றவையாகி விடும் என்பதையே காட்டுகின்றன. அதே போன்று பரபரப்புரைகளில் மிகவும் பலவீனமாக இருந்த சில நாடுகள் விடுதலை பெற்றும் இருக்கின்றன.
கிழக்கு திமோர் என்கின்ற நாடு விடுதலை அடையும் வரை, உலகில் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறான ஒரு நாடு இருப்பதே தெரியாது. எவ்வாறு முன்பு ஈராக் சிறிய நாடாகிய குவைத்தை ஆக்கிரமித்ததோ, அதே போன்று இந்தோனேசியா 1975இல் கிழக்குதிமோர் என்ற சிறிய நாட்டை ஆக்கிரமித்து தன்னுடைய ஒரு மாகாணமாக இணைத்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐநா சபை ஒரு தீர்மானம் கொண்டு வந்ததோடு நின்று விட்டது. கிழக்கு தீமோர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தோனேசிய இராணுவம் கொடுரூமாக நசுக்கியது. உலகின் மிகப் பெரிய இனப்படுகோலை கிழக்கு திமோரில் நடந்தது. அன்றைய நிலையில் மேற்குலக நாடுகளுக்கு இந்தோனேசியாவின் நட்பு அவசியமாக இருந்தது. பின்பு 25 வருடங்களுக்குப் பிறகு மேற்குலக நாடுகளின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது, மேற்குலக நாடுகள் தலையிட்டு கிழக்கு திமோருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தன. இத்தனைக்கும் கிழக்கு திமோர் மக்கள் மேற்கொண்ட பரப்புரை மிகப் பலவீனமாகவே இருந்தது.
இதே போன்று எரித்திரியா என்கின்ற நாடும் விடுதலை பெறும்வரை அறியப்படாத ஒரு நாடாக இருந்தது. எரித்திரியாவின் வரலாறு தமிழீழத்தின் வரலாற்றோடு ஓரளவு ஒற்றுமைகளைக் கொண்டது. காலனித்துவ நாடுகளால் எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு, எதியோப்பியாவால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின்பு தமது பலத்தின் மூலம் விடுதலை பெற்று ஒரு நாடாக எரித்திரியா விளங்குகிறது. "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" என்கின்ற விடுதலை இயரிரிக்கம் எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எரித்திரிய விடுதலைப் போராளிகளுக்கு ஆரம்பத்தில் அன்றைய சோவியத் யூனியன் உதவிகளை வழங்கியது. பின்பு எதியோப்பியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எரித்திரியப் போராளிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆயினும் போராளிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. சோவியத் யூனியனின் இராணுவம் வெளியேறியது. இதற்கிடையில் எரித்திரியாவிலும் பல இயக்கங்கள் உருவாகி, அவர்கள் ஆடு, மாடுகளை கொள்ளையிட்டு துரோகச் செயல்களிலும் ஈடுபட்டு, பின்பு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" இயக்கத்தினரால் அடக்கப்பட்டது ஒரு தனிக் கதை. 1991 ஆண்டு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" எரித்திரியாவின் அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுத்தது. தமது இராணுவ பலத்தின் மூலம் எதியோப்பியாவை பணியச் செய்த எரித்திரியா விடுதலை அடைந்தது. எரித்திரியர்களும் பரப்புரைகளில் பலவீனமாகவே இருந்தார்கள்.
பரப்புரைகள் பலவீனமாக இருந்தும், மேற்குலகின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது கிழக்கு திமோரும், வெல்லப்பட முடியாத இராணுவ பலத்தின் மூலம் எரித்திரியாவும் விடுதலை பெற்றன.
மேற்குலகின் நலன்கள் தமிழீழத்திற்கு சார்பானதாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தற்போதைக்கு தென்படவில்லை. ஆனால் தமிழீழம் என்பது எவராலும் வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும். தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளும் மீட்டெடுக்கப்படுகின்ற பொழுது, ஆயிரம் தடைகள் இருந்தாலும் தமிழீழம் விடுதலை பெற்றே தீரும். ஆகவே தமிழீழத்தின் மீது போடப்படுகின்ற தடைகளாக இருக்கட்டும், அல்லது நாளை கிடைக்கவிருக்கும் சர்வதேச அங்கீகாரமாக இருக்கட்டும், இவைகள் பரப்புரைகளில் மாத்திரம் தங்கியிருப்பவைகள் அல்ல. பரப்புரைகளின் பலவீனம் காரணமாகவே தடைகள் வருவதாகக் கூறுவது, அதுவும் பேராசிரியர் சிவத்தம்பி போன்ற கல்விமான்கள் கூறுவது, விடயத்தை திசை திருப்புவதற்கு சமனாகும். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் ("தாரகி") பேராசிரியர் சிவத்தம்பி அவர்களிடம் அரசியலை விடுத்து இலக்கியத்தை மட்டும் எழுதும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்தார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அரசியற் கட்டுரைகள் குறித்து மாமனிதர் சிவராம் கொண்டிருந்த கருத்தை வலுப்படுத்துவது போன்று, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பரப்புரை சம்பந்தமான கட்டுரையும் செவ்வியும் அமைந்து விட்டன.
ஆனால் இவைகளை இங்கு படிப்பவர்கள் பரப்புரைகள் தேவையில்லை என்று நான் சொல்வதாக கருத வேண்டாம். பரப்புரைகளின் மூலம் தடைகளை தடுக்க முடியாது என்பதை நிறுவும் பொருட்டே இவ்வளவும் இங்கு கூறுப்பட்டது. எப்படி தமிழீழத்திற்கு ஆதரவாக சிறிலங்காவில் செய்யப்படுகின்ற பரப்புரைகள் சிறிலங்கா அரசின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதோ, அதே போன்று தமது நலன்களுக்காக தடைகளைப் போடுகின்ற மேற்குலகின் நிலையிலும் எமது பரப்புரைகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவுபடுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.
அதே வேளை பரப்புரைகள் நிச்சயமாகத் தேவை என்பதை மிகவும் அழுத்தமாக கூறி வைக்க விரும்புகிறேன். முக்கியமாக தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது பணிகளை செய்வதற்கு பரப்புரைகள் தேவை. பரப்புரைகள் மூலம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழீழத்திற்கு பயனுள்ள பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும். இது போன்ற பரப்புரைகள் (பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறிய "லொபி") ஒரு சில நாடுகளில் மட்டும்தான் நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இயங்குவதை அம்பலப்படுத்தியது. இது தமிழர்களின் "லொபி" இல்லாமல் நடந்திருக்க முடியாது. இதே தொலைக்காட்சி சில நாட்களின் பின்பு தமிழர்களுக்கு எதிரான செய்தியையும் ஒளிபரப்பியது. இதற்கு காரணமாக அவுஸ்ரேலியாவில் வாழும் சிங்களவர்களின் "லொபி" இருந்திருக்கும். ஆனால் இவைகளை இரு தரப்பினரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். இதே போன்று வேறு சில வேலைத்திட்டங்களும் செய்யப்படுகின்றன. ஆகவே பரப்புரைகள் எங்குமே நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஆனால் இந்த பரப்புரைகள் மேலும் அதிகமாகச் செய்யப்பட வேண்டும் என்பதிலும், அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
தடைகளின் மத்தியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டவர் மத்தியில் பரப்புரைகளைச் செய்வோம். எமது பலத்தின் மூலமே தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும் என்பதையும், அதற்கு தோள் கொடுக்கின்ற கடமை அனத்து தமிழர்களுக்கும் உள்ளது என்பதையும் உணரச் செய்வதற்கு, மிக முக்கியமாக எம்மவர் மத்தியிலும் பரப்புரைகளை செய்வோம்.
வி.சபேசன் (19.05.06)

ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது,
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன்.
ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி, உங்களை அச்சத்தில் ஆழ்த்தி ,உளவியல்ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல.
உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வாகிக்கிறார்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள்; நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ, நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே, ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை.
அதேவேளை நீங்கள் தடுத்த வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வேதனைக்கு பழி வாங்கப் புறப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது "உவரை விட்டது பெரிய பிழை, ஆளைப் போட்டிருக்க வேண்டும்" என மிகச் சாதரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். உண்மையில் உங்களின் விடுதலை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எமது நாடு ஒரு தவறான தீர்ப்பை எழுதவில்லை என பெருமிதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விடுதலை செய்தது தவறு என பேச வைத்துவிட்டீர்களே! தயவு செய்து ஒருமுறை சிந்தியுங்கள்.
நீங்கள் முன்பு விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும், மாற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள், இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள். முதலில் ஆதரித்துவிட்டு தனக்கு பிரச்சனை என்றவுடன் குத்துக்கரணம் அடித்து எல்லாவற்றையும் பிழை என்று சொல்பவர்களை எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? இந்த விடயத்தில் டக்ளசும் சித்தார்த்தனும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் எதிர்த்து வருகிறார்கள்.
அத்துடன் இன்னுமொன்றையும் கவனித்தேன். உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை. ஆனால் பாருங்கள். ஆங்கிலம் படித்த உங்களால் எங்களின் தாய்மொழியை சரியாக பேச முடியவில்லை. ரிபிசி வானொலியில் உரையாற்றும் போது சரியான தமிழ் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் திணறுவதை கேட்கின்ற பொழுது பரிதாபமாக இருக்கிறது. அதை விட உங்களின் "ல"கர "ழ"கர உச்சரிப்பு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது. இந்தக் குறை ரிபிசி பணிப்பாளருக்குத்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் வந்த பிறகு காதில் தேன் வந்து பாய்கிறது. விடுதலைப்புலிகள் உங்களை தடுத்து வைத்திருந்த பொழுது தமிழைக் கற்பித்து அனுப்பியிருக்கலாம். உங்களுக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது மரபுப்படி "அன்பிற்கும் மதிப்பிற்கும்" என்று ஆரம்பித்தாலும், இந்த இரண்டையும் நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவிட்டீர்கள். இன்னுமொன்றையும் சொல்லி முடிக்கிறேன். நான் உங்களுடன் பேசுவதற்குத்தான் முதலில் எண்ணினேன். ஆனால் எழுதுவதே நல்லது என முடிவெடுத்தேன். காரணம், எழுதுகின்ற பொழுது யாரும் குறுக்கே எழுத முடியாது.
இப்படிக்கு
வி.சபேசன்