Saturday, June 23, 2007

மேற்குலக நாடுகளின் தவறான அணுகுமுறை!

கடந்த 21.06.07 அன்று பிரித்தானியாவில் காவல்துறையினரால் இரண்டு முக்கிய தமிழீழ ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் நேற்றும் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் செயற்பட்டு வருகின்ற தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்து விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கைதுகள் இடம் பெற்று வருகின்றன.

பிரான்ஸில் ஆரம்பித்த இந்தக் கைது நடவடிக்கை, பின்பு அமெரிக்கா, அவுஸ்ரேலியா என்று தொடர்ந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த நாடுகளில் தமிழீழ ஆதரவு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

(சுவிஸ் நாட்டிலும் நடந்த வன்முறைச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து அங்கும் சிலர் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.)

தற்பொழுது பிரித்தானியாவிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் பொறுப்பாளர் ஏ. சி சாந்தன் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் கோல்டன் லம்பேட் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 28 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

கைது செய்யப்படுகின்ற தமிழீழ ஆதரவாளர்களை பல நாட்கள் தடுத்து வைத்திருப்பதற்கு ஏதுவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அதனால் இவர்களை உடனடியாக பிணையில் எடுப்பதும் முடியாத ஒன்றாக இருக்கின்றது.

பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கை பல தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏ. சி சாந்தன் போன்றவர்கள் ராஜதந்திர மட்டங்களில் தொடர்புகளை கொண்டிருந்தும், இது போன்ற கைது நடவடிக்கைகள் நடைபெறுவது பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

அண்மைக் காலமாக மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசின் மீது சில கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த நாடகத்தை புரிந்து கொள்ளாத பல தமிழர்களும் மேற்குலகம் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்புவதாக நம்பி ஒரு மயக்கத்தில் ஆழ்ந்தனர். இதை சில அரைகுறை அரசியல் ஆய்வாளர்களும் ஊக்குவித்தனர்.

ஆனால் மேற்குலக நாடுகள் தன்னை நடுநிலைமை போன்று காட்டிக் கொண்டு, உண்மையில் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை கொடுப்பதிலும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்ற முயற்சிகளிலுமே ஈடுபட்டு வருகின்றன.

மேற்குலகம் சிறிலங்கா மீது எத்தனை கண்டனங்களையோ அல்லது தடைகளையோ விதித்தாலும் கூட, அவைகள் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தை கொண்டவை அல்ல என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே வேளை விடுதலைப் புலிகள் அழுத்தங்களுக்கு பணிபவர்கள் அல்ல என்பதையும் இந்த மேற்குலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் காலமாக சிறிலங்கா, இந்தியா என்று பல தரப்பினர் விடுதலைப் புலிகளை பலவீனப் படுத்தியும் அழுத்தங்களைக் கொடுத்தும் பணிய வைக்க முடியும் என்று நம்பி கடைசியில் தோல்வியை தழுவிக் கொண்டனர். பிற்காலத்தில் டிக்சிற் போன்றவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளை தவறாக கணித்து விட்டோம் என்று ஒத்துக் கொண்டார்கள்.

ஆனால் இன்றைக்கும் மேற்குலகம் விடுதலைப் புலிகளை அழுத்தங்களின் மூலம் பணிய வைக்க முடியும் என்று நம்புவது வேடிக்கையானது.

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை கொடுப்பதை விடுத்து, சிங்கள இனவாத அரசின் மீது உண்மையான அழுத்தங்களை கொடுப்பதே சரியான வழி முறையாக இருக்கும் என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

http://www.webeelam.com/

No comments: